திண்டுக்கல்: திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு திண்டுக்கல் ராஜக்காபட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசுஆரோக்கியம் தொடங்கி வைத்தார். பள்ளி நிர்வாக அதிகாரி அருட் தந்தை பிரிட்டோ முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஞானசீலா அனைவரையும் வரவேற்றார். இதில், திட்ட அதிகாரி ஜூலியட் ரோஸ், உதவி திட்ட அதிகாரி மணிகண்டன், ஆங்கில ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கினை வட்டார வளர்ச்சி அதிகாரி இளையராஜா தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் பேசுகையில்,
“பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்களாக பாதுகாத்து வளர்க்கிறார்கள். மாணவர்கள் வாகனங்களை கவனமாக இயக்கி, விபத்துகளை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உங்கள் பெற்றோர்கள் உங்களை நம்பியே இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் பல உயிர்களை பறித்து வருகிறது” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான என்.எஸ்.எஸ். மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















