மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த (28.06.2024)ம் தேதி மதுரை மாவட்ட சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரை Online Part Time Job வேலை தருவதாக கூறி ஏமாற்றி ரூபாய் 52,66,417/-ஐ பல்வேறு வங்கிகணக்குகள் மூலமாக பெற்றுக்கொண்டு ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாதி குற்றவாளிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.76,52,625/- முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக வாதி குற்றவாளிகளுக்கு Online Part Time Job வேலைக்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து புலன் விசாரணை செய்த போது, ஒரு குறிப்பிட்ட வங்கியில் போலியாக நடப்பு வங்கி கணக்கு ஒன்றினை கேரளா காயாம்குளத்தை சேர்ந்த நவ்சத் மகன் அன்வர்சா என்பவர் தொடங்கி அதை கேரளா காசர்கோடுவை சேர்ந்த அப்சல் @ முஜீப் முகமது என்பவரது உதவியுடன் சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்ததும், இந்த வங்கி கணக்கு மூலம் கோடி கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
மேற்படி குற்றவாளி அன்வர்சாவை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கேரளா மாநிலம் காயாங்குளம் சென்று கைது செய்து அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி காசோலை புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குற்றவாளிகள் டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஆசைவார்த்தை கூறி சைபர் குற்றவாளிகளின் மூலம் ஆன்லைன் பணமோசடி செய்து ரூ.1.8 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றி கைவரிசை காட்டியிருப்பதும் அதற்கு ரூபாய் ஐம்பதாயிரம் கமிஷன் பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியதோடு மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய அறிவுறுத்தினார்கள். மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் அல்லது இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்