தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில் வளாக மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் வருகின்ற 17.10.2020 முதல் 26.10.2020 ஆகிய பத்து நாட்கள் நடைபெற இருக்கும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று (20.09.2020) கோவில் வளாகம் எஸ்.எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது இந்த தசரா திருவிழாவை சிறப்பாக அதே சமயம் கூட்டம் இல்லாத, கொரோனா பாதிப்பில்லாத திருவிழாவை எப்படி கொண்டாட வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
இது ஒரு முதற்கட்ட கூட்டம்தான், வரும் வாரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும், அக்கூட்டத்தில திருவிழா தொடர்பாக என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் இருக்கும், அதன் பேரில் காவல்துறை செயல்படும். இன்று இக்கூட்டத்தில் நீங்கள் கூறிய கருத்துக்கள் மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு கூட்டத்தில் எடுத்துரைத்து இந்த திருவிழாவை மிகச் சிறப்பாக உங்கள் ஒத்துழைப்புடன் செய்ய முடியும் என்று கூறி தனது உரையை முடித்தார்.
இக்கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு. கணேசன், இந்து மகா சபை மாநில செயலாளர் திரு. அய்யப்பன், சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் திரு. சசிகுமார், குலசை ஊராட்சி மன்ற தலைவர் திரு. சொர்ணபிரியா, துணைத் தலைவர் திரு. கணேசன், சிவலூர் தசரா குழு தலைவர் திரு. முருகேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பாரத், குலசேகரப்பட்டடினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ராதிகா, உதவி ஆய்வாளர்கள் திருமதி. அமலோற்பவம், திரு. முனியாண்டி உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.