ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல்படி மண்டபம் வனத்துறையினர் கடலில் ரோந்து சென்றனர்.
அப்போது வேதாளை கடற்கரை வந்த நாட்டுப்படகு வனத்துறையினரை கண்டதும் கரை திரும்பாமல் கடலுக்குள் மீண்டும் சென்றது. இதையடத்து வனத்துறையினர்; ரோந்து படகில் துரத்தி சென்று முயல் தீவு அருகே நாட்டுபடகை மறித்து சோதனை செய்ததில் படகில் கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து படகு, அதில் இருந்த இருவரை கைது செய்து மண்டபம் வனத்துறை அலுவலகம் அழைத்து வந்தனர்.
விசாரணையில் வனத்துறையினரை கண்டதும் நாட்டுப்படகில் உயிருடன் இருந்த 500 கிலோ கடல் அட்டைகளை கடலில் போட்டு விட்டதாகவும், படகில் 300 கிலோ கடல் அட்டைகள் இருந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக
வேதாளையை சேர்ந்த மீரான்கனி, முகமது நசீர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க மண்டபம் வனத்துறையினர் நடவடிக்கை மேற் கொண்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான நாட்டுப்படகை பறிமுதல் செய்தனர். கடந்த ஆறு நாளில் மண்டபம் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் 3 டன் கடல் அட்டைகள் மற்றும் 3 நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.