திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டியை அடுத்த சங்கணம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 32).இவரது நண்பர் கங்காதரன் (32) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் திண்டுக்கல்- சிலுவத்தூர் சாலை பிரிவு அருகே நடந்து சென்றனர்.
அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் கருப்பையாவையும், கங்காதரனையும் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றனர்.இதில் கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.
கங்காதரன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.சுகுமார் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பார்த்திபன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.விஜய்,திரு.ஜெய்கணேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இன்று இரண்டெல்லபாறைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இரண்டெல்லப்பாறை குளம் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வடக்கு மாலபட்டியை சேர்ந்த சகோதரர்கள் சிரஞ்சீவி (36) முருகேசன் (41) மற்றும் சங்கணம்பட்டியை சேர்ந்த முருகேசன் (35) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கருப்பையாவுடன் சேர்ந்து பெயிண்டர் வேலை செய்ததும், அந்த சம்பள பணத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் கருப்பையாவை மதுபோதையில் கொலை செய்ததும்,
அதைத் தடுக்க வந்த கங்காதரனையும் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது.இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு திரு.ரவளிபிரியா பாராட்டினார்.