ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு .பன்னீர்செல்வம், தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (35), என்பது தெரியவந்தது. ரேஷன் அரிசியை கடத்தி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.