பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் (32), எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ள இவர் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், மாயவேலிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பட்டதாரியான திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ஓலையூர் கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்கிற மரிய ரஞ்சித் (32) என்பவர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு நண்பராக பழகியுள்ளார். மாயவேலிடம் மரிய ரஞ்சித் துபாய் நாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சத்தை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். ஆனால் மரிய ரஞ்சித் கூறியபடி மாயவேலுக்கு துபாய் நாட்டில் வேலை வாங்கி தரவில்லை. மேலும் அவர் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி மாயவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை கொட்டிவாக்கத்தில் பதுங்கியிருந்த மரிய ரஞ்சித்தை நேற்று முன்தினம் கைது செய்த சைபர் கிரைம் போலீசார் நேற்று பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். மரிய ரஞ்சித்திடம் இருந்து ரூ.4 லட்சம், 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மரியரஞ்சித் பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-ல் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசாருக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு .ச.மணி, பாராட்டு தெரிவித்தார்.