தேனி : திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வசிப்பவர் ரமேஷ்குமார் (37) கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இவர், தேனி பங்களாமேட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த செல்வம் என்ற சூப்புசெல்வம் (36), தனது கையில் வைத்து இருந்த ஒரு கூர்மையான வாளை காட்டி மிரட்டி, ரமேஷ்குமாரிடம் இருந்து ரூ.450-ஐ பறித்தார். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ரமேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூப்புசெல்வத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் திரு.விவேகானந்தன் ஆஜராகி வாதாடினார். 7 ஆண்டு சிறை வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாத் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சூப்புசெல்வத்துக்கு வழிப்பறி செய்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், ஆயுதம் காட்டி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.