திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சீமைசாமி, அவர்கள், தலைமையிலான சைபர்கிரைம் போலீஸார், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் திரு. ராஜதுரை, உதவி ஆய்வாளர் திரு. ராஜரத்தினம், உதவி ஆய்வாளர் திரு.அச்சுதன் ஆகியோர் அடங்கிய சைபர் கிரைம் காவல்துறையினர் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு ரூபாய் 6 லட்சத்தி 88 ஆயிரத்து 460 மதிப்புள்ள 50 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து,செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, அந்தந்த காவல் நிலைய காவலர்களிடம் இன்று (22.06.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் ஒப்படைத்தார்கள்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இதுவரை மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையினர் 32 லட்சத்து 7 ஆயிரத்து 535 மதிப்புள்ள 264 செல்போன்களை மீட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்ட செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இன்று வழங்கப்பட்ட செல்போன்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலன் கருதி செல்போன்களை காவலர்கள் நேரடியாக அவர்கள் வீட்டுக்கே சென்று உரியவர்களிடம் வழங்குவார்கள் என தெரிவித்தார்.
பின் செல்போன்களை மீட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள்.
கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைத்து விட்டால், அது ஒரு வேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால் அதை அவர்கள் பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சைபர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு ராஜதுரை, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், உதவி ஆய்வாளர் அச்சுதன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை.