மதுரை : மதுரை கரிமேடு நடராஜ் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (72), இவருடைய மகன் உமா சங்கர் (40), இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வியாபாரம் செய்து வந்தார். பல்வேறு இடங்களில் கடன் வாங்கியும் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வியாபாரத்தில் அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடன் கொடுத்தவர்களும் தொல்லை செய்ய ஆரம்பித்தனர். கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தாயும் மகனும் நள்ளிரவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். காலை வரையிலும் வீடு திறக்கப்படாமல் இருக்கவே அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் கரிமேடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த தாய் மகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர்களின் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி