திண்டுக்கல்: பழனி புதுநகர் பகுதியில் ஆவணங்களின்றி பைக் ஒன்று விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி டி.எஸ்.பி திரு.சிவா அறிவுறுத்தலின்பேரில், பழனி நகர காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன்,சார்பு ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார், குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்திரு. தியாகராஜன்,திரு.கண்ணன் உள்ளிட்ட போலீசார் புதுநகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புதுநகர் ரயில்வேகேட் அருகே இரண்டு பைக்குகளில் வந்த மூன்றுபேரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் ஓட்டிவந்த பைக்குகளுக்கு ஆவணங்கள் ஏதுமில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்விசாரணையில் பழனி மதினா நகரை சேர்ந்த ஹபீப்ரகுமான்(23), புதுநகர் முகமதுஜாபர்(19), பழனி பெருமாள் கோவில் நடுத்தெருவை சேர்ந்த சக்திவேல்(20) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து ராயல் என்ஃபீல்டு புல்லட், பல்சர், ஹோண்டா, யமஹா உள்ளிட்ட 11பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.