திண்டுக்கல்: அய்யலூர் அருகே உள்ள காக்காயன்பட்டியை சேர்ந்த பாலுசாமி மகள் செல்வராணி (வயது 22). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி காக்காயன்பட்டி மலைப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையே தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக செல்வராணியின் தந்தை பாலுசாமி, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ரவளிபிரியாவிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், செல்வராணியும், அதே ஊரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான சங்கர் என்ற பாலாஜி 26 என்பவரும் காதலித்து வந்தனர். அப்போது செல்வராணி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் வற்புறுத்தினார். அதற்கு சங்கர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த செல்வராணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.