திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் வசிப்பவர் சுதாகர் என்ற மீனவர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து தொழில் செய்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் குலதெய்வ வழிபாட்டிற்காக மேல்மலையனூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கிருந்த அவருக்கு அண்ணாமலைச்சேரி கிராமத்திலிருந்து தொலைபேசி மூலம் தங்கள் வீடு தீப்பற்றி எரிகிறது என தகவல் வந்துள்ளது. அதன்படி அங்கிருந்து உடனடியாக கிளம்பி வந்து பார்த்தபோது சுமார் 7 இலட்சம் மதிப்புள்ள
மீன்பிடி வலைகள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தீ பரவி வீட்டில் இருந்த அனைத்து ஆவணங்களும்,ஆடைகளும், மின்சார பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகி தாங்கள் நிற்கதியாகப்பட்டு விட்டோம் என்பதை நினைத்து கதறி அழுதுள்ளனர். இது குறித்து திருப்பாலைவனம் காவல் துறைக்கும், வருவாய்த்துறை,வட்டார வளர்ச்சி அலுவலகம் அனைத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த உதவியும் செய்ய யாரும் வரவில்லை என அழுது புலம்புகின்றனர். வசதியுடன் இருந்த தாங்கள் ஒரே நிமிடத்தில் அனைத்தையும் இழந்து அடுத்தவரிடம் கையேந்து நிலைக்கு வந்ததை கண்டு மிகவும் மனமடைந்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















