திருச்சி : திருச்சி மாநகரம் எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய பகுதியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை கொள்ளையடித்த குற்றவாளி ரெத்தினம் (எ) ரெத்தினவேல் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி குற்றவாளியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி குற்றவாளி தாக்கல் செய்துள்ளார்.
மேற்படி குற்றவாளி நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, அதை மீறி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி குற்றவாளி தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 317 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி குற்றவாளி உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.