குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று பூதப்பாண்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்களுக்கு பள்ளியோடு சந்திப்பு பகுதியில் குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு சென்றபோது அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த குமார் 34. மற்றும் ஜோஸ் 33. என்பது தெரியவந்தது.
பின்பு அவர்களை தீவிர விசாரணை செய்து, அந்த இடத்தை சோதனை செய்த போது அவர்கள் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை, மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பின்பு அவர்களிடமிருந்த 480 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துராஜ் அவர்கள் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தார். மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.