திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள மாலப்பட்டியை அடுத்த காமாட்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40).இவர் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார்.
கடந்த 10ந் தேதி இவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ 23 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வந்தார்.இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவின்பேரில்,
புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்குணசேகர், அழகர்சாமி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
வத்தலக்குண்டு பைபாஸ் சாலை பள்ளபட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தனர்.இதையடுத்து அவர்களை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபுத்திரன் (34) சாமியார் தோட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் (34) என்பது தெரியவந்தது.
மேலும் தனது நண்பர்களான மெங்கில்ஸ் ரோட்டை சேர்ந்த வினோத் (34) பி.எல் பட்டதாரி.நாகம்மாள் தெருவைச் சேர்ந்த ஹரிபிரசாத் (25), காமாட்சிநகரை சேர்ந்த ரமேஷ்ராஜா (34).எம்.பி.ஏ. பட்டதாரி ஆகியோர் சேர்ந்து சோப்பு கம்பெனி உரிமையாளர் சிவகுமார் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து இந்திரா நகரில் பதுங்கியிருந்த வினோத்,ஹரிபிரசாத், ரமேஷ்ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 25 பவுன் நகை,ரூ 15 லட்சம் பணம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.