திருவள்ளூர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாள் போராட்டம் அறிவித்திருந்தனர். இன்று திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி கருப்பு கொடிகளை ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். கடந்த 10ஆண்டுகளாக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாக குற்றம் சாட்டினர். தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கும் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி GO BACK MODI என முழக்கமிட்டனர். கடல் தாமரை என்ற அமைப்பை உருவாக்கி மீனவர்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த பாஜக அதனை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் வட்டார நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு