சேலம்: எடப்பாடி அடுத்த கோணமோரிமேடு பகுதி அரசு கலைக்கல்லூரி அருகே 1500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு. தலைமறைவான பிரபல சாராய வியாபாரி அண்ணாதுரையை கொங்கணாபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோணமோரிமேடு பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே அடர்ந்த வனபகுதியில் உள்ள புதர்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக எடப்பாடி காவல் ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் மற்றும் அவர் தலைமையிலான காவல்துறையினர், வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோணமோரி பாலம் அருகே சுமார் 1500 லிட்டர் அளவிற்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்ட ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் சாராயம் காய்ச்ச தயாரிக்க ஊறல் வைக்கப்பட்டிருந்த பகுதி கொங்கணாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், கொங்கணாபுரம் காவல் ஆய்வாளர் இளவரசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கொங்கணபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர், சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஊறல்களையும் அதற்காக பயன்படுத்தப்பட்ட அடுப்பு, பேரல்கள் உட்பட அனைத்தையும் அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய பிரபல சாராய வியாபாரி அண்ணாதுரை என்பவரை கொங்கணாபுரம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.