விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள உள்ள ஊத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50), இவரது மனைவி ராஜேஸ்வரி (40), இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். முத்துப்பாண்டி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தம் பகுதியை சேர்ந்த பரமசிவம் (50) என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பரமசிவம் கூலி வேலை பார்த்து வருகிறார். ராஜேஸ்வரி, பரமசிவத்தின் தகாத உறவு குறித்து அறிந்த முத்துப்பாண்டி தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் பரமசிவத்துடன் பழகுவதை ராஜேஸ்வரி தவிர்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி வேலை விசயமாக வெளியூருக்கு சென்றிருந்தார்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த முத்துப்பாண்டி, தனது மனைவி கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, ராஜேஸ்வரியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தன்னுடன் நன்றாக பழகிவந்த ராஜேஸ்வரி திடீரென்று தன்னிடம் பேசுவதை தவிர்த்த ஆத்திரத்தில், பரமசிவம் ராஜேஸ்வரியை கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்தது. தலைமறைவாக இருக்கும் பரமசிவத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி