பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் (08.12.2023) -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி ‘கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுகள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் ஏரி, குளம், ஆறு, போன்றவைகளில் குளிக்க செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் போன்றவை குறித்தும் சாதிய பாகுபாடுகளை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு காவல்துறையில் இயங்கும் விரல்ரேகை பிரிவு மோப்பநாய்ப்படை பிரிவு வெடிகுண்டு தடுப்பு பிரிவு சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு ஆகிய பிரிவுகள் குறித்தும் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தொடுதல் குறித்த விழிப்புணர்வினை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஆகியவை பற்றிய விழிப்புணர்வுகளும் மாணவர்களிடம் ஏற்படுத்தப்பட்டது.