கடலுார் : கடலுார் அருகே, தேர்தல் முன் விரோதத்தில், முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன பதற்றம் நீடிப்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலுார் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்தவர் மாசிலாமணி; முன்னாள் ஊராட்சித் தலைவர். இவரது தம்பி மதிவாணன், 36. கடந்த உள்ளாட்சித் தேர்தலில், குண்டு உப்பலவாடி ஊராட்சித் தலைவர் பதவிக்கு மாசிலாமணியின் மனைவி பிரவீனா, அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் மனைவி சாந்தி ஆகியோர் போட்டியிட்டனர்.
சாந்தி வெற்றி பெற்று, ஊராட்சி தலைவர் ஆனார்.இதனால், மாசிலாமணி – மதியழகன் தரப்பினர் இடையே விரோதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மோதலில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு 9:30 மணியளவில், மதிவாணன் கண்டக்காட்டில் இருந்து தாழங்குடாவிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, 10க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றது.
தகவலறிந்த அவரது ஆதரவாளர்கள், தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள், வலை குடோன்களுக்கு தீ வைத்தனர். வீடுகள், வாகனங்கள் சூறையாடப் பட்டன. கடலுார் தீயணைப்புத் துறை அலுவலர் சீனுவாசன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில், 20க்கும் மேற்பட்ட படகுகள், மீன் பிடி வலைகள், 10க்கும் மேற்பட்ட வீடுகள், மாருதி வேன், 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., எழிலசரன், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை மேற்கொண்டனர்.
தாசில்தார்கள் செல்வக்குமார், மகேஷ் உடனிருந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கொலை செய்யப்பட்ட மதிவாணனின் உடலை போலீசார் கைப்பற்றி, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மதிவாணனுக்கு பிரதிமா, 29, என்ற மனைவியும், துவாரகா, 9, என்ற மகள், பிரமேஷ், 5, என்ற மகனும் உள்ளனர்.கொலை தொடர்பாக, தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்