கோவை : சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ரிலையன்ஸ் கார்டன் பகுதியில் உள்ள காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் சிங்காநல்லூர் நந்தா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் விக்னேஷ் குமார்( 21) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த ஒரு கிலோ 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.