சேலம்: கஞ்சா பழக்கத்தை கைவிட வேண்டும் என கண்டித்ததால் அக்காவின் கணவரை அடித்துக் கொன்ற பட்டதாரி இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாநகர், சாமிநாதபுரம் அல்ராஜ் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் கோகுலநாத் 37,
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகன் 25 பட்டதாரி ஆவார். இவருக்கு கஞ்சா போதை பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அக்காவின் கணவர் கோகுல்நாதிடம், பாலமுருகனின் கஞ்சா பழக்கம் குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனால் கோகுல்நாத் தனது மைத்துனர் பாலமுருகனிடம் கஞ்சா பழக்கத்தை விட வேண்டுமென கேட்டு கண்டித்துள்ளார்.
இதனால் மாமன், மைத்துனருக்கிடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மைத்துனர் பாலமுருகன், கோகுல்நாத் தூங்கிக்கொண்டிருக்கும்போது, சுத்தியால், கோகுல்நாத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் கோகுல்நாத் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
உடனடியாக மாமனார் சந்திரசேகர், கோகுல்நாத்தை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுத்தியலால் தாக்கிய பாலமுருகனை, அவரது தாய் தந்தையரே பிடித்து அறையில் பூட்டி வைத்து, பள்ளப்பட்டி காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.