இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மருத்துவராக பணிபுரியும் இவருக்கு வங்கி கணக்குடன் PAN கார்டை இணைக்குமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது. குறுஞ்செய்தியில் உள்ள Link – யை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்ததும், தனது வங்கி கணக்கிலிருந்த 2 இலட்ச ரூபாயை இழந்துவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனடியாக 1930 என்ற சைபர்கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
இப்புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, 2 இலட்ச ரூபாய் பணத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் மற்றும் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் மணிகண்டனிடம் ஒப்படைத்தார்கள்.