திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த முருகன் (68).சிறிது மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து காணாமல் போன நபரின் குடும்பத்தினர் உடனடியாக புகார் அளிக்காமல், தாமதமாக கடந்த (12.02.2024) அன்று முன்னீர் பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போன நபரை கண்டறிவதற்காக பல்வேறு கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், CCTNS PORTAL என்ற சிறப்பு தொழில்நுட்பம் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மதுரை மாநகரம், திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அடையாளம் தெரியாமல் இறந்த நபர் வழக்கில் முருகனின் உருவம் ஒத்து போனது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் CCTNS PORTAL என்ற தொழில்நுட்பம் மூலம் இவ்வழக்கினை கண்டறிந்து, புலன் விசாரணைக்கு உதவிய, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், A. தங்க மலர்மதியை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்