சென்னை : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் திரு.மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சூடான் நாட்டை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.அவரிடம் இருந்து ரூ.82 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 850 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சூடான் நாட்டு வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.