அரியலூர் : 2025-26 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவலர்கள் பதவி உயர்வு ஏற்படும் கால தாமதத்தினை கருத்தில் கொண்டு, உறுதியான பணி முன்னேற்றத்தின் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள காவலர்களுக்கான நிலை உயர்த்தல் காலத்தை 10+3+10 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது உள்ள பதவி நிலை உயர்வு திட்டத்தை மாற்றி 10 ஆண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் நிலைக் காவலர்களாகவும், முதல்நிலைக் காவலர் பதவியிலிருந்து தலைமை காவலர் பதவி உயர்வு பெறுவதற்கான தகுதி உள்ள காலம் 5 ஆண்டு கால வரம்பை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு, பின்னர் தலைமை காவலர்களாக பத்தாண்டுகள் பணிபுரிந்ததும் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி நிலை உயர்வு பெற வழிமுறை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த முதல்நிலைக் காவலர்கள், (30.06.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் இ.கா.ப., அவர்களிடம் இருந்து தலைமைக் காவலராக பதவி உயர்வு பெற்ற அரசாணையை பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சட்டம் ஒழுங்கு காவல்நிலையங்களில் பணிபுரியும் 54 மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் 12 மொத்தம் 66 முதல் நிலைக் காவலர்கள் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்று பயன்பெறுவார்கள்.