தேனி : லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து இன்று தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மரியம் பல்லவி பல்தேவ்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருE.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் மலர்வளையம் வைத்து 66 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த 5 காவலர்களை நினைவு கூறும் வகையில் நினைவு தூணில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்து வீரமரணமடைந்த காவலர்களின் குடும்பத்தாருடன் இணைந்து வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.