சென்னை: சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 01.01.2022 முதல் 08.04.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 39 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 17 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 1 குற்றவாளி, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 2 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி என மொத்தம் 60 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 1) செல்வம் (எ) அப்பளம் (வ/23) அயனாவரம், சென்னை என்பவர் வழிப்பறி செய்த குற்றத்திற்காக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். 2) ரேணுகா (வ/48) பள்ளிக்கரணை என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பண மோசடி செய்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு (Job Racket) பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த குற்றவாளி செல்வம் (எ) அப்பளம் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளரும்.
ரேணுகா என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு, வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளரும் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் மேற்படி இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 05.04.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், இருவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போன்று இமான் (எ) அரவிந்த் (வ/26) சிந்தாதிரிப்பேட்டை என்பவர் மீது 1 கொலை வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் கடந்த 30.03.2022 அன்று சகாதேவன் என்பவரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.