சென்னை : சென்னையில் கடந்த ஆண்டு வீடு புகுந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு, செல்போன், வாகன திருட்டு போன்ற வழக்குகளில் 19 கோடியே 29 லட்சம் மதிப்பிலான 6 ஆயிரத்து 643.3 பவுன் (53.2 கிலோ) தங்கம், ரூ.2 கோடியே 70 லட்சத்து 87 ஆயிரத்து 939 பணம், 1,487 செல்போன்கள், 425 மோட்டார் சைக்கிள், 31 ஆட்டோக்கள், 18 வாகனங்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இந்த வழக்குகளில் தொடர்புடைய 495 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 117 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பொருட்கள் சென்னை போலீஸ் மாவட்டங்கள் வாரியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கலந்துகொண்டு திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். போலீஸ் கமிஷனருக்கும், திறம்பட வழக்கை கையாண்ட போலீசாருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ரோந்து பணியை தீவிரப்படுத்துவதற்காக ‘ஸ்மார்ட் காவலர் செயலி’யை கொண்டு வந்துள்ளோம். தற்போது வெளியூர் செல்பவர்கள் போலீஸ்நிலையத்தில் தகவல் சொன்னால் போலீசார் இரவு ரோந்து சென்று வீட்டை கண்காணிப்பார்கள். இதில் மாநில குற்ற ஆவண காப்பகத்தின் உறுதுணையுடன் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளோம். வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்கிறோம் என்று இணையதளத்தில் பதிவு செய்துவிட்டால் ரோந்து போலீசாருக்கு நேரடியாக தகவல் சென்று விடும். அவர்கள் இரவு குறைந்தபட்சம் 3 முறை வீட்டை கண்காணிப்பார்கள். இந்த திட்டத்தை ஒரு மாதத்துக்குள் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.இது போன்று வருங்காலங்களில் குற்றங்களை குறைக்க இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ‘சைபர் கிரைம்’ குற்ற வழக்குகள் 100 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் 90 சதவீதம் மக்களுடைய அலட்சியதால் ஏற்பட்டுள்ளது. இதில் விழிப்புணர்வுடன் இருந்தால் 90 சதவீத சைபர் குற்றங்கள் தானாகவே குறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் டி.எஸ்.அன்பு, பிரேம் ஆனந்த் சின்கா உள்பட போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.