விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (27). இவரது மனைவி புஷ்பவல்லி (25). கடந்த 2011ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. சிறிது நாட்களிலேயே கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, புஷ்பவல்லி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். தொடர்ந்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ஜெயபாண்டி, புஷ்பவல்லிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடுமையான தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான புஷ்பவல்லி, ஜெயபாண்டியுடன் சேர்ந்து வாழ்வதை விட விஷம் குடித்து தற்கொலை செய்யப் போவதாக கூறி வந்தார். மகளின் வாழ்க்கை பாழானதைக்கண்டு, புஷ்பவல்லியின் தந்தை முத்துகிருஷ்ணன், தாய் பஞ்சவர்ணம், தங்கை மகேஸ்வரி மற்றும் புஷ்பவல்லி ஆகிய நான்கு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து விருதுநகர் ரூரல் போலீசார் வழக்குபதிவு செய்து, நான்கு பேர் தற்கொலைக்கு காரணமான ஜெயபாண்டியை கைது செய்தனர். சம்பவம் குறித்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், மனைவி உட்பட அவரது குடும்பத்தினர் என 4 பேர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமான ஜெயபாண்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி