குமரி: கடத்தல்காரர்கள் புது புது டெக்னிக்கை பயன்படுத்தி ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய நபர்களை பிடித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாட்டுத்தீவனம் என்ற பெயரில் ஒரு டாரஸ் லாரி வந்தது. போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதை பார்த்ததும் டிரைவர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர்.
அப்போது வண்டி முழுவதும் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். லாரியில் 30 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அரிசி குமரி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.