இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருடைய 3 வயதான பெண் குழந்தைக்கு நரம்பு மண்டல பிரச்சினையால், கடந்த ஒன்றரை வருடங்களாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இக்குழந்தைக்கு ஒவ்வொரு மாதமும் கொரியர் மூலம் மருந்துகள் அனுப்பப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவால் மருந்து கிடைக்கவில்லை.
இதனால் வேதனை அடைந்த அவரது பெற்றோர்கள் தனது உறவினர் மூலமாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS, அவர்களின் பிரத்யேக கைபேசி எண்ணில் (94899 19722) தொடர்பு கொண்டு விபரத்தினை கூறினர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.Dr.S.தீபா கானிகேர், IPS, அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தைக்கு உரிய மருந்துகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் வாங்கித் தருமாறு கோரினார். அத்துடன் இராமநாதபுரத்தில் இருந்து ஒரு காவல் வாகனத்தை சேலம் நோக்கி அனுப்பினார்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி மருந்துகளை வாங்கி அங்கிருந்து காவல் வாகனத்தில் அனுப்பி வைத்தார். மேற்படி, குழந்தையின் உறவினர் பேசிய 14 மணி நேரத்திற்குள் அக்குழந்தைக்கு சேரவேண்டிய 2 மாத மருந்துகளை இராமேஸ்வர உட்கோட்டம் துணைக் காவல் கண்காணிப்பாளர் மூலம் இரவு 10 மணிக்கு குழந்தையின் பெற்றோரிடம் மருந்தினை ஒப்படைத்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்