திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தின் சாதனை பெண்கள் வரிசையில் திருமதி.அம்பிகா IPS,மும்பை வடக்கு DCP. பெண் குழந்தைகளாக பிறந்துவிட்டாலே பருவமடைந்த உடனேயே திருமணத்தை செய்து வைப்பதிலேயே பெற்றோர்களும், சுற்றத்தாரும் விரும்புவதிலும் முனைப்புடன் இருப்பதிலும் வழக்கமான ஒன்று. அதுதான் அம்பிகாவுக்கும் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கும், 14 வயதே ஆன அம்பிகாவுக்கும் திருமணம் நடந்தது. உண்மையில் அது குழந்தைத் திருமணம்! 14 வயது சிறுமியாக இருந்தாலும், மணவாழ்வில் அங்கமாகிய அம்பிகாவுக்கு 18வது வயதில் 2 பெண் குழந்தைகள்.
20 வயதில் தான் பத்தாவதே படிக்க ஆரம்பிக்கிறார். பின்னர், ஐ.பி.எஸ். பயிற்சிக்காக சென்னைக்கு சென்று படிப்பதாக கேட்ட அம்பிகாவுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அம்பிகாவின் கணவர்.
26 வயதில் முதுகலை பட்டம், IPS தேர்வில் 3 முறை தோல்வி, இருந்தும் அவர் முயற்சியை கைவிடவில்லை. மூன்று முறை ஐ.பி.எஸ். தேர்வில் அம்பிகா தோல்வியை தழுவியதால் அவரது கணவர் வீட்டிற்கு வரச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார். அவர் சொல்லும் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட பின்னர், மேலும் 1 ஆண்டு மட்டும் அவகாசம் கொடுங்கள் என்றும் அப்படியும் தேர்வாகாவிடில் ஆசிரியராகவாவது பணிபுரிந்து கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.
2008ம் வருடம் நான்காவது முறையாக முயற்சித்து வெற்றிபெற்று, இன்று மும்பை நகர வடக்கு DCP என உயர்ந்து நிற்கிறார். குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சமூகத்தையும், பெற்றோரையும் குறை கூறாமல் தன்னுடைய இலக்கை அடைவதற்கு அயராது உழைத்திருக்கிறார் அம்பிகா காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற அவரது நம்பிக்கையை தளர விடாமல் இருந்ததால் இன்று ஐ.பி.எஸ் ஆகியுள்ளார்.
குழந்தை பருவத்தில் திருமணம் செய்திருந்தாலும், அதையே நினைத்து வருந்தாமல், எவ்வித மனக் குமுறல்களும் இல்லாமல் தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை இலக்காக கொண்டால் எவராலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கும், தற்போது சமூகத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வரும் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் அம்பிகா.
சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் சாதனைகள் உன் வசமாகும் என்பது மனோதத்துவம் அதற்கு சிறந்த உதாரணம் திருமதி.அம்பிகா IPS அவர்கள்…போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது
குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா