கோவை : கோவை மாவட்டத்தில் பேரூர் சரகத்திற்கு உட்பட்ட எல்லைக்குட்பட்ட வரம்பில் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. 29.58 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 58 தெருக்களும் கொண்டது தொண்டாமுத்தூர் இரண்டாம் நிலை பேரூராட்சி. இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 11492 (2011 கணக்கெடுப்பின் படி ) ஆகும். 13000க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு ISO தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த மாதம் மத்திய தர கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நிலை, பதியப்பட்ட வழக்குகளின் நிலை, பொதுமக்கள் போலீஸ் நல்லுறவு, காவல் நிலையம் பராமரிப்பு, மருத்துவ குணம் நிறைந்த மூலிகை செடி வளர்த்தல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு, ஆணவக் கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு, குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, மது விலக்கு அமலாக்க தடுப்பு குறித்து விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிகழ்த்துதல், குற்ற நடவடிக்கைகள் தடுத்தல், திரும்ப திரும்ப குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு காவலுக்கு பரிந்துரைத்தல், உள்ளிட்டவைகள் பாராட்டை பெற்றுள்ளது.
இங்கு 31 காவலர்கள் பணிபுரிய வேண்டிய, இந்த காவல் நிலையத்தில் 12 காவலர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஆனால் இந்த காவல் நிலையத்தின், சிறப்பான செயல்பாடுகளால் மத்திய அரசால், ISO தர சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு பணியாற்றும் காவல் ஆய்வாளர் திரு.மணிவண்ணன்தொண்டாமுத்தூர் காவல் நிலையம் மற்றும் வடவள்ளி காவல் நிலையம் என இரண்டு காவல் நிலையங்களை நிர்வகித்து வருகின்றார். கடுமையான காவல் பணிகளுக்கு இடையே, இரண்டு காவல் நிலையங்களை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், அதனை சிறப்புடன் செயல்படுத்தி, நற்சான்றிதழ் பெற்றிருப்பது பாராட்டுதலுக்கு உரியது. காவல் ஆய்வாளர் திரு.மணிவண்ணன்அவர்கள் நிர்வாக திறமை, புகார்களை விசாரிக்கும் தன்மை, குற்றவாளிகளிடம் இவரின் அணுகுமுறை உள்ளிட்டவைகள், புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம், இவர் காட்டும் அன்பான உபசரிப்பு, அப்பகுதி மக்கள் நலனுக்கான நிகழ்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவைகளால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளார். இதனை அங்கிகரிக்கும் விதமாக மத்திய தர சான்றிதழ் ஆணையம் ISO தர சான்றிதழ் அளித்திருப்பதே இதற்கு சான்று.
இதன் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு 2019-2020 ஆம் ஆண்டிற்கான ISO தரசான்றிதழ் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள காவல் நிலையங்களில், ISO தரச்சான்று பெற்ற ஒரே காவல் நிலையம் என்ற பெருமையை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார், IPS அவர்கள் வாழ்த்துத்து தெரிவித்தார். பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வேல்முருகன், காவல் ஆய்வாளர் திரு.மணிவண்ணன், காவல் உதவி ஆய்வாளர் திரு.நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான திரு.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் திரு.ராஜாமணி மற்றும் காவல் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு ISO தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறித்து கோவை ஈஷா யோகா மையம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ISO தர சான்றிதழ் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்