திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் டவுணை சேர்ந்த கண்ணன் என்பவர் 2006-ம் ஆண்டு ராமையன்பட்டி சிவாஜி நகரில் 15 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு கண்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு கண்ணன் அவர்களின் மனைவி அருணா மேற்படி இடத்தை பார்வையிட சென்ற போது அங்கு டவர் அமைக்க குழி தோண்டி கொண்டிருந்தனர்.மேற்படி நபர் நிலத்தை வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்ததில் நிலம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. பின் அருணா மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. மீராள் பானு அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி. சோபியா மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் நில உரிமையாளரிடம் (26.11.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். மேலும் அந்த இடத்தில் டவர் அமைக்க இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அதன் மூலம் மாத வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
கணவரை இழந்த நபருக்கு நிலத்தை மீட்டு கொடுக்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.