திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, மாவட்ட சமூக அலுவலர் தனலட்சுமி மற்றும் மாவட்டத்தில் உள்ள யூனியன் தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து பேசப்பட்டது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்விக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஊராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவையாக ஸ்மார்ட் வகுப்பறை என்பது தற்போதைய சூழலில் உள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை என்ற திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியுடன் அமைக்க ஊராட்சி தலைவர்கள் முயற்சி எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஊராட்சி தலைவர்கள் பங்களிப்பு அதிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. நெல்லை மாவட்டம் நீர் மேலாண்மைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கும் நீர்நிலைகளை 2024-ம் ஆண்டுக்குள் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் நீர் மேலாண்மைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டமாக நெல்லை மாவட்டத்தை மாற்றும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பள்ளிக்கூடங்களிலும் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் 208 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக 100 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 308 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட உள்ளது. மேலும் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு ரூ.8 கோடி நிதி மாவட்ட பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட உள்ளது’ என்றார்.