திருச்சி: கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்த இத்தேர்வில் தினமும் 500 பேர் வீதம் அழைக்கப்பட்டு உடல் தகுதித் தேர்வான உயரம், மார்பு அளவீடு மற்றும் ஓடுதல் ஆகியவை தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக் குழுவின் தலைவரும், திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருமான முனைவர் பா.மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
கடந்த 2ஆம் தேதி முதல் நான்காம் தேதி வரை பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில் ஆயிரத்து 5 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் திருச்சியை சேர்ந்த திருநங்கையும் அடங்குவார்.
மேலும் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு மீண்டும் கடந்த 4-ம் தேதி முதல் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் 100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இறுதி நாளான நேற்று 523 பேர் பங்கேற்றனர். பெண்களுக்கான நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் மற்றும் 100 மீட்டர் 200 மீட்டர் தூரம் ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த உடற்தகுதி தேர்வில் மொத்தம் 321 பெண்களும், 1128 ஆண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.