கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஊமச்சிகுளம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகங்களில் குறிப்பாக சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய சரகங்களில் இரவு நேரங்களில் தங்களது வீட்டில் ஆட்கள் தூங்கிக் கொண்டு இருக்கும் போதே நகைமற்றும் பணத்தினை ஒரு கும்பல் கன்னக் களவு செய்து கொள்ளையடித்து வந்தது.
அந்த கும்பலைப் பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத் அவர்களின் உத்தரவுப்படியும் ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு.கிருஷ்ணன் இ.கா.ப வழிகாட்டுதலின்படி சிலைமான் வட்டக் காவல் ஆய்வாளர் திரு.மோகன் அவர்களின் தலைமையில் சார்புஆய்வாளர்கள் திரு.குமரகுரு, திரு.கார்த்திக் அவர்களின் மற்றும் காவல் ஆளிநர்கள் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் மேற்படி கொள்ளையர்கள் நேற்று 18.10.2023-ம் தேதி இரவு கல்மேடு சந்திப்பு வழியாகச் சென்று பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து தனிப்படையினர் கல்மேடு சந்திப்பில் தீவிரகண்காணிப்பில் இருந்த போது TN 59 BK2747 என்ற எண் கொண்ட YAMAHA RI5 என்ற இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி அவர்களை தனிப்படையினர் சோதனையிட்ட போது அவர்கள் கொள்ளையடிக்கத் தேவையான ஆயுதங்கள் மற்றும் கையுறை ஆகியவற்றை மறைத்து வைத்திருப்பதைத் தெரிந்து அவர்களை பிடித்து தீவிரமாக விசாரிக்க அவர்கள் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் இளமனூர் புதூரைச் சேர்ந்த பேச்சி முத்து என்பவர் மகன் சின்னச்சாமி என்ற நரி மற்றும் சோனை என்ற சோனைச் சாமி என்பதும் இவர்கள் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.
தீவிர விசாரணைக்குப் பின்னர் இவர்களிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 180 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் ரூபாய் 9,00,000/- (ஒன்பது லட்சம்) கைப்பற்றப்பட்டது. பின்னர் இவர்களுக்கு உடந்தையாக இருந்த இவர்களுடைய அண்ணன் பெரியகருப்பசாமி மற்றும் இவர்களுடைய பெரியம்மா ஆசைப் பொண்ணு ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து இது போன்று குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மதுரைமாவட்டக் காவல் கண்காணிப்பாளர் SP சிவபிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்