தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 05.10.2022 அன்று நிதி நிறுவனம் சார்பாக தணிக்கை நடந்த போது அந்நிதி நிறுவனத்தில் இருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 130 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேற்படி நிதிநிறுவனத்தின் சிறப்பு இயக்குநரான தூத்துக்குடி W.G.C ரோடு பகுதியைச் சேர்ந்த சூர்யாமுத்து மகன் ராகவேந்திரா 37 என்பவர் நேற்று (06.10.2022) அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் அவர்கள் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ராஜாராம் தலைமையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசாருக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து தங்க நகைகளை மீட்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி நிதி நிறுவனத்தின் மேலாளரான தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் அருள் ஞான கணேஷ் 48 என்பவர் அந்நிதி நிறுவனத்தில் தங்க நகைகளை திருடி மோசடி செய்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளி அருள் ஞான கணேஷை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட தங்க நகைகளில் 80 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.