விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார். நேற்றிரவு ராஜபாளையத்தில் ராம்கோ விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த ஆளுநர், இன்று காலை திருவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்தார். ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தை தொட்டு வணங்கிவிட்டு கோவிலுக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி இருவரும் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளை தரிசனம் செய்தனர். ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் கோவில் யானை ஜெயமால்யதாவிற்கு, ஆளுநர் பழங்கள் வழங்கி ஆசி பெற்றார். முன்னதாக ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த ஆளுநரை மணவாளமாமுனிகள் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜர் வரவேற்றார். ஸ்ரீஆண்டாள் கோவிலில் தரிசனம் முடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராஜபாளையம் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் – ராஜபாளையம் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி