சென்னை : சென்னையை அடுத்த தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் இரும்புலியூர் பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருபவர் முகமது அன்வர் உசேன் (30), திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 22-ந் தேதி இரவு இவரது கடைக்கு காரில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் வந்தது. அவர்கள், “நாங்கள் திரிபுரா மாநில போலீசார். ஒரு வழக்கு சம்பந்தமாக உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும். காரில் இன்ஸ்பெக்டர் உள்ளார்” என்று கூறி முகமது அன்வர் உசேனை தங்களுடன் வரும்படி கூப்பிட்டனர். அதை உண்மை என்று நம்பிய அவர், மர்மநபர்களுடன் காரில் ஏறினார். அப்போது மர்மநபர்கள், முகமது அன்வர் உசேனின் கண்ணை கருப்பு துணியால் கட்டி, அவரை காரில் கடத்திச்சென்றனர். மேலும் கையை துப்பாக்கி போல் வைத்து மிரட்டிய மர்ம கும்பல், “எங்களுக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும். இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டினர். இதனால் பயந்து போன முகமது அன்வர் உசேன், தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்மகும்பல், தாழம்பூர் பகுதியில் அவரை காரில் இருந்து இறங்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்தில் முகமது அன்வர் உசேன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கேளம்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த வாகனத்தை போலீசார் மடக்கிப்பிடித்து அதில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர். அதில் அவர்கள், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அல்காஸ்மியா (32), ஜலீல்மியா (23), பெர்வெஜ் மியா (26) என்பதும், இவர்கள்தான் வியாபாரி முகமது அன்வர் உசேனை ரூ.5 லட்சம் கேட்டு காரில் கடத்தியதும் தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள், வசதியாக வாழ்ந்து வரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து இதுபோல் போலீஸ் போல் நடித்து கடத்தி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து ரூ.20 ஆயிரம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலில் சம்பந்தப்பட்டு திரிபுரா மாநிலத்துக்கு தப்பிச்சென்ற மேலும் 3 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார், திரிபுரா மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.