சென்னை: சென்னை, தரமணி பகுதியில் வசித்து வரும் சுரேந்தர் (வ/29) என்பவர் தனியார் நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். சுரேந்தர் 04.04.2022 அன்று அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மது போதையில் பெருங்குடி, திருவள்ளுவர் நகர், பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்தபோது, அந்த வீட்டிலிருந்த பெண்மணி சத்தம் போடவே, சுரேந்தர் அவரது செல்போனை தவறவிட்டு சென்றார். பின்னர் சுரேந்தர் அவரது செல்போனை தேடி மீண்டும் மேற்படி வீட்டிற்கு சென்ற போது, அந்த வீட்டில் இருந்த பெண்மணியின் தம்பி சுந்தர் என்பவர் எதற்காக வீட்டிற்குள் வந்தாய்.
என்று கேட்டு, தகராறு செய்து, சுரேந்தரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் இரத்த காயமடைந்த சுரேந்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுரேந்தரின் நண்பர் ஆடலரசன் என்பவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி சுரேந்தர் என்பவரை அரிவாளால் தாக்கிய சுந்தர் (வ/26) பெருங்குடி என்பவரை கைது செய்தனர். மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது