தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்று தப்பியோடியார். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கை மேற்கொண்டு குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டனர்.
தொடர்ந்து தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, தூத்துக்குடி P&T காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சசிகுமார் (30). என்பதும், அவர் மேற்படி வீட்டில் புகுந்து பெண்மணியிடம் இருந்து தங்கச் செயினை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து தங்கச் செயினையும் மீட்டனர். இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட சசிகுமாரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து தங்கச் செயினை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.
















