மதுரை: மதுரை மாநகரில் செல்லூர், தல்லாகுளம்,திருப்பாலை, டிவிஎஸ் நகர், தெப்பக்குளம், விளக்குத்தூண்,தெற்குவாசல் புதூர் மற்றும் கூடல்புதூர் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதில், தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மதுரை போலீஸ் கமிஷனர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன்,மதுரை நகரில் பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளை அடித்த 15 வழக்குகளில் தொடர்புடையது விசாரணையில் தெரியவந்தது.
அதேபோல் ,மதுரை அவனியாபுரத்தில் சேர்ந்த ராஜேஷ் குமார் மற்றும் காமராஜபுரம் சேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து 7 வழக்குகளில் தொடர்புடையதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 22 வழக்குகளில் தொடர்புடைய சுமார் 53 லட்சம் மதிப்புள்ள 144 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.மேற்படி, குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய உதவியாக இருந்த தனிப்படையினர் மதுரை போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.