திருவள்ளூர்: தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஒன்றிய அரசு நிதி வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. ஏறக்குறைய 4034 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு வராததால் அதன் மூலம் பயனடைந்து வந்த பெண்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் உடனடியாக ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓரண்டிற்கான 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்திட வேண்டும், நாள் ஊதியத்தை 700 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும், நிலுவையில் உள்ள 4000 கோடி ரூபாயை உடனடியாக விடுவித்திட வேண்டும், கூலி பாக்கியை வட்டியோடு வழங்கிட வேண்டும், 100 நாள் வேலையை நகர்புறத்திற்கு விரிவுபடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கும் வரையில் அடுத்தடுத்த தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு