தூத்துக்குடி :கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தற்போது இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி 20.04.2021 அன்று முதல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 09.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது அத்தியவாசியப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்ளுக்கு மிகாமல் கலந்து கொள்வதில் எந்த விதமான தடையுமில்லை, ஆனால் திருமண நிகழச்சிகளுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களை வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றிற்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், திரையங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கபடமாட்டாது உட்பட தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும்,
மேலும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும்போது சிலர் பெயரளவுக்கு முகக்கவசத்தை போட்டுள்ளனர், சிலர் வாய்க்கு மட்டும் போட்டுள்ளனர், இவ்வாறு போட்டு பயனில்லை. இந்த நோய் 90 சதவீதம் மூக்கு வழியாகத்தான் வேகமாக பரவுகிறது. ஆகவே முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எடுத்துரைத்துத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் திரு. முருகபெருமாள், திரு. முத்துகணேஷ், திரு. வெங்கடேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.