தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஏ.எஸ்.பி-யாக திருமதி.ஸ்ரேயா குப்தா, என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா குப்தா கடந்த 2018ம் ஆண்டு இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர். இவர் கடந்த ஒரு வருடங்களாக தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளார். அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு சமூக விரோத செயல்களை ஒழித்தவர் என்ற பெயர் பெற்றவர். அதிரடி ஏ.எஸ்.பி என்ற பெயர் பெற்ற ஸ்ரேயா குப்தா, விளாத்திகுளம் பகுதியில் உதவி காவல் காணிப்பாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தமபாளையம் பகுதியில் காட்டிய அதிரடியை விளாத்திகுளம் பகுதியிலும் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளாத்திகுளம் பகுதியில் பெரும் சவாலாக விளங்கும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்படுகிறது. விரைவில் ஸ்ரேயா குப்தா விளாத்திகுளம் உதவி காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளார்.