விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு விவசாயம் செழிப்பாக நடைபெற்று வருகிறது. நடையனேரி, எரிச்சநத்தம், எம்.புதுப்பட்டி, செவலூர், செல்லையநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல இடங்களிலும் கரும்பு விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில், விளையும் கரும்புகள் மிகுந்த தித்திப்புடன், நல்ல உயரத்துடன் பருமனாக இருப்பதால் இதற்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தைப்பொங்கல் திருநாளுக்கு இன்னும் 3 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், கரும்பு அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக ஏராளமான கரும்பு வியாபாரிகள், கரும்பு தோட்டங்களில் காத்திருக்கின்றனர்.
சிவகாசி பகுதிகளில் கரும்பு விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. இங்குள்ள பட்டாசு ஆலைகள், அச்சகங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தைப்பொங்கல் திருநாளில் கரும்பு தோரணங்கள் கட்டப்படும். மேலும், தங்களது நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் கரும்புகள் கொடுப்பார்கள். கரும்புக்கான தேவை அதிகமாக இருப்பதால், தற்போதே தங்களுக்கு தேவையான கரும்புகளை கட்டுகட்டாக வாங்கி வருகின்றனர். சிவகாசியில், சிவன் கோவில் பகுதி, ரதவீதிகள், கயறுகுத்துப் பாலம், சிறுகுளம் கணமாய் பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும், கரும்புகள் கட்டுக்கட்டாக விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. 15 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று 400 ரூபாயிலிருந்து, 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கரும்பு வியாபாரிகள் கூறினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி