திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் இன்று காலை விபத்தில் சிக்கியது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து திரும்பிய போது போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த காவல் ஆணையரின் கார் மீது பின்னால் வந்த லாரி டயர் வெடித்து சரக்கு வாகனம் உட்பட அடுத்தடுத்த வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வம் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில் காவல் ஆணையர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரிலிருந்து காவல் ஆணையரை சக காவலர்கள் மீட்கும் காட்சியும் விபத்தில் சிக்கிய காவலரை பொதுமக்கள் மீட்கும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆணையரின் கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில் காரின் கதவுகள் திறக்க முடியாமல் ஆணையரின் காவலர் கையில் ரத்த காயங்களுடனும் காவல் ஆணையரும் காருக்குள் சிக்கி கிடந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் காவலர்கள் காரின் முன்பக்க கதவின் ஜன்னல் வழியே ஆணையரின் பாதுகாவலரை முதலில் காரில் இருந்து மீட்டனர். தொடர்ந்து காரின் பின்பக்க கதவின் வழியே சீட்டை அப்புறப்படுத்தி காவல் ஆணையர் காரின் பின்பக்க கதவு வழியாக காவலர்கள் பத்திரமாக மீட்டனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு